கடையநல்லூரில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை உருவாக்க நடவடிக்கை
கடையநல்லூர் பகுதியில் தொடர் திருட்டை தடுக்கவும், பல்வேறு விசாரணையில் போலீசாருக்கு உதவவும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் எனும் நண்பர்கள் அமைப்பை மீண்டும் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
கடையநல்லூர் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் சவுதி, துபாய், மாஸ்கட், பஹ்ரைன், குவைத், சிங்கபூர் போன்ற நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் கடையநல்லூர் பகுதியில் பொருளாதாரம் மேம்பட்டு உள்ள நிலையில் சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களுக்கு இணையாக இருந்து வருகிறது. இதனால் இங்கு பலவகையில் நிலமோசடி நடந்து பல கோடி ரூபாய் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
அது போல கள்ள காதல் பிரச்சனை காரணமாக பெண்களும் அடிக்கடி மாயமாகி வருகின்றனர். மேலும் மணல் கடத்தல், குண்டுக்கல் உள்ளிட்ட கனிம வள பொருட்கள் கடத்தல் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, சூதாட்டம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையும் ரகசியமாக ஆங்கங்கே நடந்து வருகிறது. போலீஸ் ஸ்டேஷன்களில் போதுமான போலீசார் இல்லாததாலும், முழுமையான ஆர்பணிப்போடு பணி செய்யாததாலும் கடையநல்லூர் பகுதியில் சட்டம் ஓழுங்கு பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோல் கடையநல்லூர் பகுதியில் தொடர்ந்து திருட்டு பயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடையநல்லூர் மெயின் பஜாரில் உள்ள ஒரு நகை கடை கொள்ளையடிக்கப்பட்டது. அத்துடன் கடந்த வாரம் கிருஷ்ணாபுரத்தில் வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் என்பவரின் மனைவியிடம் இருந்து பட்டபகலில் 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. அது போல கடையநல்லூர் அட்டைகுளம் பகுதியில் இரவு தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது போல கடந்த ஆண்டு சுமார் 5 கொள்ளையடிப்பு சம்பவம் நடந்த போதிலும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அத்துடன் கொள்ளைகளை தடுக்க போலீஸ் தரப்பில் இரவு ரோந்து பணியும் சரிவர மேற்க்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர்.
எனவே முன்பு திமுக ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் எனும் போலீஸ் நண்பர்கள் திட்டத்தை சிறப்பாக அமல்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் விரும்புகின்றனர். ஒவ்வொரு பகுதியில் சமூக அக்கறை உள்ள இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை இரவு ரோந்து பணிக்கும், போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணிக்கும், விழா காலங்களில் கூட்டங்களை கட்டுபடுத்த பயன்படுத்துவது போ்ன்றவற்றிக்கு பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர். அத்துடன் கடந்த ஆட்சி காலத்தில் போலீஸ், பொதுமக்கள், உறவை மேம்படுத்த நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் போன்றவற்றை நடத்தி பொதுமக்கள், போலீஸ் உறவை மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
இது போன்ற நடவடிக்கையால் திருட்டு குறைவதோடு பல்வேறு மோசடிகள் நடைபெறாமலும் தடுக்க முடியும். அத்துடன் போலீஸ் ஸ்டேஷன்களில் தலைவிரித்தாடும் கட்டப்பஞ்சாயத்து, புரோக்கர் ராஜ்ஜியம் போன்றவைகளும் முடிவுக்கு வரும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கருதுகின்றனர். எனவே கடையநல்லூரில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட போலீஸ் நிர்வாகத்தை கடையநல்லூர் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக