வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை
வரலாற்று சிறப்பு மிக்க ரயில் பாதைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதையாகும். 1873ம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய அரசால் தொடங்கப்பட்ட செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை பணிகள் 27 ஆண்டுகள் நடைபெற்றது. இப்பாதையை அமைத்திட தென்னிந்திய ரயில்வே கம்பெனி ரூ.17 லட்ச ரூபாயும், திருவாங்கூர் நிர்வாகம் ரூ.7 லட்ச ரூபாயும், அப்போதைய திருவாங்கூர் திவான் ராமய்யர் ரூ.6 லட்சம் ஆக ரூ.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இப்பணிகள் தொடங்கப்பட்டு 1901ம் ஆண்டு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1902ம் ஆண்டு முதல் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 1901ம் ஆண்டு கொச்சி துறைமுகத்திற்கு கப்பல் வழியே ரயி்ல் பெட்டிகள் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து மாட்டு வண்டிகளில் பொருட்களை ஏற்றி கொல்லம் கொண்டு வரப்பட்டு முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து 1904ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி கொல்லம் ரயில் நிலையத்தில் வைத்து 21 குண்டுகள் முழங்கிட அங்குள்ள ரயில் நிலைய மேலாளர் ராமைய்யா என்பவர் முதல் பயணிகள் ரயிலை கொல்லத்தில் இருந்து செங்கோட்டைக்கு கொடியசைத்து துவங்கி வைத்தார். ரயிலின் பெயர் தூம சகடசூரன் ஆகும். சில மாதங்கள் இப்பாதையில் சென்ற ரயில் தென்மலை-கழுதுருட்டி இடையே உள்ள ஒரு குகையில் மண் சரிவு ஏற்பட்டு அப்படியே பல பயணிகளோடு மண்ணோடு மண்ணாகி புதைந்து போனது. அதன்பின் அருகிலேயே 13 கண் கொண்ட மிகவும் பிரமண்டமான ஒரு பாலத்தை கட்டினர். அப்பாலம் வழியே தற்போது ரயி்ல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இப்பாதையில் பகவதிபுரம் முதல் ஆரியங்காவு இடையே 1 கிமீ தொலைவில் ஒரு மலை குகையும், கழுதுருட்டி-தென்மலை-இடமண்-இடையே 4 மலைக்குகைகளும், 5 பெரிய பாலங்களும், 120க்கும் மேற்பட்ட சிறிய பாலங்களும் உள்ளன.
செங்கோட்டை-புனலூர் இடையே உள்ள முக்கிய தலங்கள் பற்றிய விபரங்கள்
செங்கோட்டையில் இருந்து சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளது.
பகவதிபுரம் ரயில் நிலையம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்ட முதல் ரயில் நிலையம். இங்கிருந்து புளியரை அருள்மிகு தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு செல்ல சுமார் 2 கிமீ தொலைவு மட்டுமே. மேலும் இந்த ரயில் நிலையம் தாண்டிய உடன் இருபுறங்களிலும் அடர்ந்த வனப்பகுதியில் தென்றல் காற்று தேகத்தை தழுவுகிறது.
வடபுறத்தில் உயர்ந்த மலைப்பகுதியின் கீழ் புறத்தில் கடல் மட்டத்தி்ல் இருந்து சுமார் 700 அடி உயரத்திலும் ரயில் சொல்லத் தொடங்குகிறது. எஸ் வளைவு என்ற பகுதி இரு மாநில எல்லை பகுதியாகும். இங்கு கீழே பேருந்தும், மேலே ரயிலும் செல்ல தொடங்கும். இதிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் சென்றல் அடர்ந்த பாறைகளை உடைத்து உருவாக்கப்பட்ட ரயில் பாதை தொடங்குகிறது. இதற்கு அடுத்தற்போல் ஆயிரம் பேரை காவு வாங்கியதாக இன்றும் செவிவழி கதையாக கூறப்படும் 1901ம் ஆண்டு அடர்ந்த 500 அடி உயரம் கொண்ட மலையினை சுமார் 15 அடி உயரமும், 15 அடி அகலமும், கொண்ட 900 மீ்ட்டர் நீளம் கொண்ட முதல் மலைக்குகை தொடங்குகிறது.
இந்த மலைக் குகையினுள் ரயில் செல்ல தொடங்கும் போது அமாவாசை இருட்டில் செல்வது போன்ற உணர்வும், ஒரு திகில் கலந்த விவரிக்க முடியாத உணர்வும் ஒரு சேர ஏற்பட்டாலும் ஆயிரம் குளிர்சாதன பெட்டிகளை இயக்கியது போன்ற குளிர்ச்சியும் ஏற்படுகிறது.
இந்த இடத்தினுள் ரயி்ல் செல்லும் போது அனைத்து பெட்டிகளிலும் மின் விளக்கு வெளிச்சம் கொடுக்கிறது. மேலும் குகை பகுதியில் பராமரிப்பு பணிகளுக்கும் செல்லும் பணியாளர்களுக்காக சுமார் 10 அடிக்கு இடை இடையே பாறையை குடைத்து சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குகையை ரயில் கடக்கும்போது சுமார் 30 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது. இக்குகையை மட்டும் கடப்பதற்கு சுமார் 2.30 நிமிடங்கள் ஆகிறது. இரவில் 28 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டது. இந்த குகையை வி்ட்டு ரயில் வெளியேறிய சில நிமிடங்களில் ஆரியங்காவு ரயில் நிலையத்தை அடையும்போது கீழே பேருந்து பாதையும், மேலே ரயில் பாதையும் நம்மை வரவேற்கிறது.
ஆரியங்காவு ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 300 அடி தூரத்தில் அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. மேலும் வருடத்தில் 10 மாதம் கொட்டும பாலருவியும் உள்ளது. ஆரியங்காவில் இருந்து கழுதுருட்டி என்ற பகுதியை நோக்கி ரயில் செல்லும்போது தேகம் திடீர் என சில்லிடும் அளவுக்கு குளிர்ந்த காற்று தேகத்தை தழுவுகிறது. இருபுறங்களிலும் தரைமட்டத்தின் 300 அடி உயர பள்ளத்தில் சோப்பு டப்பாக்களை சிதைத்து விட்டது போல் மலைக்குன்றுகளுக்கு இடையே ஆங்காங்கே தென்படுகிறது, ஆலயங்கள், கட்டிடங்கள், ரப்பர், கிராம்பு, வாழை தோட்டங்கள்.
ரயில் பாதையை ஓட்டி ஏராளமான பகுதிகளில் குடியிருப்புகள், 8 கண் பாலத்தை ரயில் கடந்து கழுதுருட்டி ரயில் நிலையத்தை தொட்டு தென்மலை ரயில் நிலையத்தை நோக்கி செல்கிறது. சுமார் 300 அடி முதல் 500 அடி நீளமுள்ள ஒரு சிறு மலைக்குகைகளை ரயில் கடக்கும்போது இடப்புறம் திரும்பி பார்த்தால் ஆங்கிலேயரின் அபாரமான செயல்திட்டமும், இருமாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பும், தியாகமும் வரலாற்றை பறை சாட்டுவது தெரியும். எவ்விதமான தொடர்பும் இல்லாத காலகட்டத்தில் தரை மட்டத்தில் இருந்து பல ஆயிரம் அடி உயரத்தில் பாதை அமைத்த திறமை தெரியும்.
இதனை தாண்டும்போது அழகாய் ஓடி கேரளத்தை நோக்கி பாயும் நதி. அதனை ஓட்டி சாலை, அதனை தொட்டற்போல் தரை மட்டத்தில் இருந்து சுமார் 80 அடி உயரத்தி்ல் 13 வாயிற்கொண்ட கற்களால் கட்டப்பட்ட இராட்சத பாலம். இதில் ரயில் ஊர்ந்து செல்லும்போது ஆயிரம் கண்கள் வேண்டும் இந்த அழகிய காட்சியை காண்பதற்கு...
இப்பாதையில் ரயில் செல்லும்போது அனைத்து பெட்டிகளை டிரைவரும், கடைசி பெட்டியில் இருக்கும் கார்டும் பார்க்க முடியும். தென்மலைக்குள் நுழையும்போதே இரு குகையை ரயில் கடந்து விடுகிறது.
தென்மலையில் கேரள மாநில சுற்றுலாத்துறை, வனத்துறை, பொதுபணி துறையினர் தனிதனியாக டூரிசம் சென்டர், படகு போக்குவரத்து, வனப்பகுதியில் மலை ஏறுதல், உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட எக்கோ டூரிசம் சென்டர் உள்ளது. கடல் போல் காட்சியளிக்கும் கல்லசா நீர்தேக்கம் அமைந்துள்ளது. இங்கிருந்து ரயில் ஓத்தக்கல் என்ற பகுதியை நோக்கி செல்லும்போது வெயில் காலங்களில் வினை இல்லை. மழைக்காலங்களில் தண்டவாளம் ரயில் சக்கரங்களை நகர விடாமல் வழுக்கிவிடும் தன்மைக்கே மாறிவிடும்.
அதற்காக ரயில்வே இன்ஜினில் சான்டல் பவுடர் தனி பாக்ஸ் மூலம் வைக்கப்பட்டு அதற்காக தனி கருவி மூலம் தண்டவாளத்தில் சான்டல் பவுடர்களை கொட்ட செய்து ரயில் சக்கரம் நகர தொடங்கும். மேலும் இந்த ரயில் நிலையத்துக்கு கட்டிடம் கிடையாது. நிலைய மேலாளர் கிடையாது. பயணிகளுக்கு டிக்கெட் வழங்க மட்டும் தனியார் ஏஜென்சி மூலம் விற்பனை நடக்கிறது. இந்த பாதையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை மழைக்காலங்களில் அடிக்கடி பாறைகள் உருண்டு விழுந்து விடும் என்பதால் ஒரு வேகானில் கம்ப்ரஸர் பிளாண்ட் வசதியோடு எப்போதும் நிறுத்தப்பட்டிருக்கும். ஓத்தக்கல், எடமண் தாண்டி புனலூரை நோக்கி ரயில் செல்லும்போது இரு சிறு குகைகளை கடந்து செல்கிறது.
இந்த பகுதியில் ரயி்ல் செல்லும்போது வெப்பமும், குளிரும் ஓரு சேர மேனியை தழுவுகிறது. மலைமுகடுகளில் பனி துளியை கொட்டும் மேகக் கூட்டங்கள் தழுவி செல்லுவதும், பச்சை பசேல் என்று திரும்பிய பக்கமெல்லாம் பூஞ்சோலைகள், ஓங்கி வளர்ந்த தேக்கு, கமுகு, தென்னைமரங்களுக்கு இடையே ஏத்தம்வாழை, ரப்பர் மரங்கள் அடர்ந்திருக்கும் மிளகு கொடியும், அருகே கிராம்பு செடியும், மரவள்ளி கிழங்கு தோட்டமும், பலாப்பழ மரங்களும் உள்ளன, தேனிக்களை போல் அதிகாலையில் ரப்பர் மரங்களின் பாலை சிரட்டையில் (கொட்டாங்குச்சியில்) வெட்டி வடிய வைக்கும் பெரியவர்களும், பெண்களும், சாரை, சாரையாய் அதிகாலையிலேயே அணிவகுத்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் சிறுவர்கள் முதல், இளைஞர்கள், இளம்பெண்களையும் காண முடிகிறது.
புனலூரில் இறங்கினால் கட்டன் சாயாவும், கப்பை கிழங்கும், மதியம் பத்ரி (புரோட்டாவோடு) கூடிய பீப் மாட்டு கறியும், கொட்டை அரிசி, மீன்குழம்பு சாப்பாடும், உணவங்களில் சுண்டிதான் இழுக்கிறது. புனலூருக்குள் ஓடிவரும் கல்லடா நதியில் அமைந்துள்ள அழகிய தொங்கு பாலம் நம்மை ஆச்சரியத்துக்கே அழைத்து செல்கிறது. இத்தடத்தில் 9 லெவல் கிராசிங்கள் உள்ளன. இதில் ஆளில்லாத ரயில் கேட் 6ம், ஆள் உள்ள ரயில்வே கேட் 3ம் உள்ளன. இத்தடத்தில் 3 ரோடு ஓவர் பிரிட்ஜ்களும் உள்ளன.
தென்மலை 13 கண் பாலம் 102.72 மீட்டர் நீளமும், 5.18 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. ஆரியங்காவு குகை கடல் மட்டத்தில் இருந்து 280 அடி உயரத்தில் அமைய பெற்றுள்ளது. ஆரியங்காவு-புனலுர் இடையே பாதையில் அம்பநாடு, ரோஸ்மலை ஆகிய பகுதிகளில் தேயிலை தோட்டங்களையும், செங்கோட்டை-கண்ணுபுளிமெட்டு பகுதியில் தேயிலை தோட்டங்களையும், அரவை ஆலைகளையும் ஆங்கிலேயர்கள் ஏற்படுத்தினர். மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் தேக்கு, கடம்பன்பாறை பகுதியில் சந்தன தோட்டங்களையும் அமைத்தனர். இந்த ரயில் பாதை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்ட பின் வனப்பகுதியை சுத்தம் செய்ய ஆட்கள் இன்றி தவித்த ஆங்கிலேயர்கள் அப்பகுதிகளில் வெள்ளி காசுகளை அள்ளி வீசியுள்ளனர். அந்த தகவலை மக்களிடம் பரப்பியுள்ளனர். அதன்பின் மக்கள் காடுகளை சுத்தம் செய்து காசுகளை பொறுக்கியுள்ளனர். இப்படிதான் இந்த பாதை உருவான வரலாறுகள் கூறப்படுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக