மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி-


மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி-கே.செல்லப்பெருமாள்-



இயற்கை இறைவனால் படைக்கப்பட்ட களஞ்சியம். இயற்கையை பாடும் புலவர்கள் நாடு, நகர், மலை, மரம், செடி, கொடி, ஆறு என அனைத்தையும் பாடுகின்றனர். வரலாற்றை வளம் பெறச்செய்த குற்றாலம் வண்டமிழ் புலவர்களை வியப்படைய செய்து பல்வேறு இலக்கியங்களை படைக்க தூண்டியது.நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தர் முதல் குறவஞ்சியால் பெரும்புகழ் பெற்ற திரிகூடராசப்பக் கவிராயர் வரை குற்றாலத்தின் இயற்கையழகை பாடியுள்ளனர். அத்தகைய வகையில் படைக்கப்பட்ட இலக்கியங்களுள் தலைசிறந்ததாய் தலச்சிறப்பையும் உணர்த்தக்கூடியது திருக்குற்றால கோவை ஆகும்.பாண்டிய மன்னர்களுக்கு பெருமை சேர்த்த 14 நகரங்களுள் ஒன்று குற்றாலம். அம்மன்னர்கள் தம் பெயரோடு இணைத்து கொண்ட நகர்கள் ஐந்து. அவற்றுள் ஒன்று பொதிகை. பொதிகை வெற்பன், பொதிகை பொருப்பன் என சூடாமணி நிகண்டிலும், திவாகர் நிகண்டிலும் கூறப்பட்டிருப்பதை காண முடிகிறது. பொற்கோட்டு இதயமும், பொதியமும் போன்று வாழ்க என்பது புறநானுற்று பாடல் வரிகள்.வரை என்ற சொல் மலை எனும் பொருள் தரும். திரிகூடமலை என்பதால் திரிகூட வரை, திரிசிர வரை, முக்கூடல் வரை எனக் குற்றால கோவை ஆசிரியர் குறிப்பிடுகிறார். குற்றால மலையின் உச்சியில் மூன்று சிகரங்கள் உள்ளதால் இம்மலைக்கு திரிகூட மலை என்றும் பெயர் உண்டு. இம்மலை கயிலாயத்திற்கு இணையானது என்றும் கூறுவர். இம்மலையின் பெருமையை "திங்கள் முடிசூடுமலை, தென்றல் விளையாடும் மலை' என மீனாட்சியம்மைக்குறம் போற்றுகின்றது.
இம்மலை கடல் மட்டத்திற்கு மேல் 550 அடி உயரத்தில் உள்ளது. இம்மலையில் அதிக உயரமுள்ள சிகரம் "பஞ்சந்தாங்கி' என்று அழைக்கப்படுகிறது. இதன் உயரம் 5135 அடி. இச்சிகரம் நாட்டின் பிற பாகங்கள் மிக்கடுமையான பஞ்சத்தால் வாடிய காலத்திலும், இவ்விடங்கள் மழைக்கு காரணமாயிருந்து துன்பம் வராமல் தடுத்து மக்களை தாங்குவதால் பஞ்சந்தாங்கி என காரணப்பெயர் பெற்றது.குற்றாலத்தில் திரிகூட மலையிலே அமைந்திருக்கும் "பஞ்சந்தாங்கி முடி' கண்ணை கவர்கின்றது என இதன் சிறப்பை "பொருநை வளம்' என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.திரிகூடமலையில் குருந்தமரம், மூங்கில், பலா, மா, கடம்ப மரம், கொன்றை, மருது, தேக்கு ஆகிய மரத்தாவரங்களை காணலாம். இதனை திருக்குற்றாலகோவையும் குறிப்பிடுகின்றது. இந்த அரிவகை மரத்தாவரங்கள் இன்றைய நிலையில் காணப்படுகிறதா என்றால் இல்லை. சுயநலமிக்க சில சமூக விரோதிகள் இயற்கை வளத்தை சீர்குலைக்கின்றனர்.
மரங்களை அழிப்பதால் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவின் அளவு அதிகரிக்கின்றது. இதனால் காற்று சூழல் பாதிக்கப்பட்டு பல உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன. மண் அரிமானம் ஏற்படுகின்றது. மழைக்காலங்கள் மாறுபடுகின்றன. புவிவெப்பமயமாக வழி வகுக்கிறது. பெய்ய வேண்டிய பருவமழை பொய்த்து விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும், தரிசு நிலங்களாகவும் மாறிவரும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் சமுதாய காடுகள் திட்டம் 1976ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் இயற்கை காடுகளை மேம்படுத்துவது மற்றும் பயன்படுத்தாத நிலங்களில் காடுகளை உருவாக்குவது ஆகும். இத்திட்டம் சரியாக செயல்படுத்தப்படவில்லை.இயற்கைக்கு எதிரியாக விளங்கும் மரம் வெட்டும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே மழை முறையாக மும்மாரி பொழியும். இல்லையேல் வானம் பார்த்த வறண்ட பூமியாக காட்சியளிக்கும் என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்