ரத்த சரித்திரம்-ஜுலை 23 


கடந்த 13 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தவிர்க்கப்படமுடியாத தினமாக நிலைபெற்றுவிட்டது, கூலிஉயர்வு கேட்டுப் போராட்டம் நடத்திய 17 போராளிகளை காவல்துறையினர் அநியாயமாக அடித்துக்கொன்ற ஜுலை 23 தாமிரபரணி நினைவு தினம். சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னன் சேரன் மார்த்தாண்டவர்மன், போரில் தனது வெற்றிக்கு உதவியதற்காக மேற்குத்தொடர்ச்சி மலையில், தன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததில் 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார். 1930ல் சிங்கம்பட்டி ஜமீன்தார், தன்னிடமிருந்த நிலத்தில் சுமார் 8374 ஏக்கர் நிலத்தை, 99 வருட குத்தகை ஒப்பந்தம் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தின் நுஸ்லேவாடியா என்பவருக்குச் சொந்தமான பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி) என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தார். அந்த காடுகள்தான் மாஞ்சோலை எஸ்டேட்டாக மாறியது.

 1மாஞ்சோலை பகுதி தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில் தினக்கூலியை 150 ரூபாயாக உயர்த்த வேண்டும், அடிப்படை வேலையான 16 கிலோ தேயிலைக்கு கூடுதலாகப் பறிக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூபாய் 5 தர வேண்டும், எஸ்டேட் பகுதியில் நிலவும் கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 33 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அதனை பிபிடிசி நிர்வாகம் 20.08.98க்கு முன்பாக நிறைவேற்றித்தர வேண்டும் என காலக்கெடுவும் விதிக்கப்பட்டது. பிபிடிசி நிர்வாகம், புதிய தமிழகம் கட்சியின், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை புறந்தள்ளியதன் விளைவாக தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் 20.08.1998 முதல் வேலைப்புறக்கணிப்பில் ஈடுபடத் துவங்கினார்கள்.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்னிறுத்தி 23.07.1999 அன்று திருநெல்வேலி மாநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. பல்வேறு பகுதி மக்களுடன், தமிழ் மாநில காங்கிரஸ், அய்க்கிய ஜமாத், சி.பி.அய்., சி.பி.அய்(எம்), உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இணைந்து தாமிரபரணி நதிக்கரையில் பேரணி சென்றார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டதை பொறுக்க முடியாத ஆளும் வர்க்கம்,காவல்துறையின் மூலமாக கலவரத்தை கட்டவிழ்த்து விட திட்டமிட்டது. புதிய தமிழகம் டாக்டர். க.கிருஷ்ணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்க்குள் சென்று மனு கொடுப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டது. ஆளும் தி.மு.க.வால்  குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று வன்முறையில் இறங்கினர். தலைவர்களின் உயிருக்கும் குறைவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. காவல்துறையின் தாக்குதல் எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்த மக்கள் சிதறி ஓடினார்கள். உயிர் தப்பிக்க ஓடிய மக்கள், தாமிரபரணி ஆற்றுப் பக்கமாக குறி வைத்து தள்ளப்பட்டனர். தாமிரபரணி நதிக்குள் குதித்தவர்களையும் விரட்டி விரட்டி அடித்தது காவல்துறை. இக்கொடுமைகளைப் படம் பிடித்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். ஒன்றரை வயது பாலகன் விக்னேஷ் உள்ளிட்ட 17 பேர் அநியாயமாக அடித்தே கொலை செய்யப்பட்டனர். நீதி கேட்டுப் போராடியவர்கள் படுகொலை செய்யப்பட்ட அரச பயங்கரவாதம் அரங்கேறியது. இன்று பதி மூன்றாவது நினைவு நாள் தாமிர பரணியில் நடை பெற்றது ....








நன்றி :பிரபாகர் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்