நெல்லை: ஆந்திர மாநிலம் நெல்லூரில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தீவிபத்தில் இறந்தவர்களில் 5 பேர் நெல்லையைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் ஐவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
நெல்லூரில் இன்று அதிகாலை நடந்த கோர தீ விபத்தில் 50 பயணிகள் உயிருடன் கருகிப் பிணமானார்கள். நெஞ்சை உறைய வைக்கும் இந்த கோர விபத்தில் உயிரிழந்தோர் குறித்த விவரம் தெரியாமல் உள்ளது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இவர்கள் ஐந்து பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சம்பந்தப்பட்ட பெட்டியில், நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாம் கட்டளை கிராமத்தை சேர்ந்த டேவிட்ராஜாவின் மனைவி குழந்தைகள் பயணம் செய்தனர்.
டேவிட்ராஜா டெல்லி காவல்துறையில் வெடிகுண்டு நிபுணர் குழுவில் பணியாற்றுகிறார். இவர் கடந்த சனிக்கிழமை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது மனைவி பொன்மணி, 5 வயது, 7 வயது நிரம்பிய 2 குழந்தைகள், மைத்துனர் தவமணி, தாய் ஆகியோரை அனுப்பி வைத்தார்.
எஸ்.11 பெட்டியில் 43, 46, 47 ஆகிய இருக்கைகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. 2 குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது. நேற்று இரவு 11 மணிக்கு பொன்மணி சென்னையில் இருக்கும் தனது சித்தி மகன் செல்வத்திடம் செல்போனில் பேசினார். நாளை காலை சென்னை வந்து விடுவேன். எங்களை அழைத்து செல்ல கார் கொண்டு வா என்று கூறியுள்ளார்.
செல்வம் பூங்காநகரில் லாரி புக்கிங் அலுவலகம் நடத்தி வருகிறார். அதனால் அவர் தங்களுக்கு சொந்தமான காரை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப் பிடித்ததை இன்று அறிந்த செல்வம் பதறி போனார். உடனடியாக தனது சகோதரியை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. காயம் அடைந்தவர்கள் பட்டியலிலும் அவர்கள் பெயர்கள் இல்லாததால் செல்வம் பதறினார்.
இதையடுத்து செல்வமும், அவரது சகோதரர் மரிய செல்வமும் சிறப்பு ரயிலில் நெல்லூர் புறப்பட்டுள்ளனர். ஐந்து பேரும் உயிரிழந்து விட்டனரா அல்லது காயமடைந்துள்ளனரா என்பது குறித்து சந்தேகம் நிலவுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக