சாபத்தால் அழிந்த சாம்ராஜ்யம்!
இந்தியாவில் மக்களாட்சி முறை தோன்றுவதற்கு முன் மன்னராட்சிகளே கோலோச்சிக் கொண்டிருந்தது அனைவரும் அறிந்தது. பேரரசுகளும், சிற்றரசுகளும் அன்று தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளை போல் வேரூன்றி விழுதுகளை பரவ விட்டிருந்தது. சூழ்ச்சிகளூம், தந்திரங்களும் மக்களாட்சிகளை போல் அன்றைய மன்னராட்சி காலங்களிலும் இருந்து வந்துள்ளன. சேரனும், பாண்டியனும் உறவு பாலம் அமைத்து திருமண பந்தங்களை ஏற்படுத்தி கொண்டிருந்த காலங்களை போல் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது.
தமிழகத்தின் தென்பகுதிகளில் திருவாங்கூர் சமஸ்தானம், கொச்சி சமஸ்தானம் உள்ளிட்ட சமஸ்தானங்களின் எல்கை காலப்போக்கில் மொழி வாரி மாநிலங்கள் பங்கீட்டில் தமிழகத்தின் தென்பகுதியை சார்ந்துள்ளது. தமிழகத்தின் எல்லையோரத்தில் பாண்டிய மன்னனும், கேரளத்தின் எல்கை பகுதிகளில் ஆட்சி செய்த சிற்றரசர்களும் உறவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் தங்கள் ஆட்சி செய்த பகுதியினை வளப்படுத்தியுள்ளனர்.
விட்டு சென்ற வரலாற்று சுவடுகளை இன்று நாம் திரும்பி பார்க்கவும், நினைவு படுத்தி கேட்கவும் மறந்து அசுர வேகத்தில் செல்லும் வாழ்க்கை சக்கரத்தில் சிக்கி கொண்டு திரும்பி பார்க்க முடியாமல் வேகமாய் கால ஓட்டத்தை கடந்து கொண்டிருக்கிறோம். நேற்றைய வரலாறுகளையும், இன்றைய வாழ்க்கை உறவுகளையும் மறந்து கடந்து போகும் நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டுள்ளான் என்ற நிலையும் இப்போது ஏற்பட்டுள்ளது வேறு விசயம்.
சரித்திரம் வாய்ந்த சம்பவங்களையும் நினைவு சுவடுகளையும், காலம் கடந்தாலும் அவை எங்கோ ஓரிடத்தில் தன் வரலாற்று நினைவுகளை பாறைசாற்றும் விதமாக சான்றுகளை கடந்த காலங்களில் விட்டு சென்றுள்ளன. உலக வரலாற்றில் கடந்த கால வரலாறுகள் இன்னும் சில பகுதிகளில் புனரமைக்கப்படாமல் புதைந்த போய் கொண்டிருக்கின்றன. அப்படி புதைந்து போன ஓரு வரலாற்று சம்பவம் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
ஆம், அதுதான் கலங்காதகண்டி கிராமத்தை பற்றியது...
சேர மன்னர்களான பந்தள மன்னர் வாரிசுகளில் ஒருவர் கலங்காத கண்டி ராஜா. அவர் ஆட்சி புரிந்த நாட்டின் எல்கை அச்சன்கோவில், அரசடிதாவு, குளத்துப்புழா என சுமார் 100 கிமீ சுற்றளவு கொண்ட குக்கிராமங்களை கொண்ட பகுதிகளை கலங்காதகண்டி ராஜா முதலில் அச்சன்கோவிலில் ஐயப்பன் கோவிலை பிரதிஷ்டை செய்த பிறகு திருமலை கோவில் முருகனை வழிபட்டு பிரதிஷ்டை செய்ய நினைத்தார்.
அதற்கு முன்னதாக தற்போதைய அரிவாள்தட்டி ஓடை என்றழைக்கப்படும் இடத்தில் கருப்பசாமி சிலையை செய்து வைத்து அரசடித்தாவு ஐயப்பன் சிலையை (அரசடிக் காவு என இப்போது அழைக்கப்படுகிறது), இங்கும் ஐயப்பனை பிரதிஷ்டை செய்து பின் 20 காவல் தெய்வங்களும் பிரிதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ஐயப்பனை சேர்த்து 21 கூட்டுறவு ஆகும்.
இதற்கு பின் திருமலை கோவில் முருகனை பிரதிஷ்டை செய்தார். கோட்டைக்குள் கோட்டையை காவல் காக்க சங்கிலி பூதத்தாரும், தனது குலதெய்வமான பகவதி அம்மனையும் பிரதிஷ்டை செய்தார். பகவதியம்மனை கொட்டாக்கரையில் இருந்து பிடிமண் கொண்டு வந்து கோட்டைக்குள் பிரதிஷ்டை செய்தார். தன்னுடைய இஸ்லாமிய நண்பரும், மன்னருமான நவாப்பிற்காக பள்ளிவாசலையும் கோட்டைக்குள்ளேயே நிறுவினார். கோட்டைக்குள் பள்ளிவாசலும், பகவதியம்மன் கோவிலும் இருந்தன.
கலங்காதகண்டி மன்னன் தனது மகளை தென்காசியை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டியனுக்கு மணம் முடித்து கொடுத்தார். மன்னன் ஒருநாள் மகளை காண தென்காசி பட்டணத்துக்கு வருவதாக மகளுக்கு தகவல் அனுப்பியுள்ளார். தன் தந்தை வரும் தகவலை கணவனிடம் இளவரசி சொல்லியுள்ளார். அப்போது மன்னர் பராக்கிரமபாண்டியன் உன் தந்தை மட்டும்தானே வருகிறார். ஓடைத்தண்ணீருமா கொண்டு வருகிறார் என்று கேட்கவே இளவரசி தந்தைக்கு தகவல் அனுப்பினார்.
மகளின் வேண்டுகோளை ஏற்று கலங்காதகண்டி ராஜா அரிகர ஆற்றின் குறுக்கே உடனடியாக அணை கட்டி ஓடை மூலம் தண்ணீர் கொண்டு செல்ல பணிகளை தொடங்கினார். ஆனால் பணிகள் கொஞ்சம் கூட முன்னேற முடியவில்லை.
மகளை வேண்டுகோளை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சிய கலங்காதகண்டி ராஜா அரசவை நம்பூதரியிடம் ஆலோசனை கேட்க நம் படையிலுள்ள ஒரு தூய வீரனை உயிரோடு பலியாக்கினால்தான் கட்டும் அணை காலகாலத்திற்கு நிற்கும் என்று கூற மனக்குழப்பத்தில் இருந்த மன்னன் கலங்காதகண்டி ராஜா மனக்குழப்பத்திலிருந்த தெளிவு பெற்றார். அந்த சமயம் மன்னனுக்கு மற்றொரு செய்தி இடியாய் இறங்கியது. தன்னுடைய இளைய மகள் தன்னுடைய படை தளபதி ஒருவருடன் காதல் கொண்டுள்ளாள் என்று ஓற்றன் தகவல் கூறவே அவரை உசுப்பேற்றியது.
ஓலை கொண்டு வந்த ஓற்றனை ஒய்வெடுக்க அனுப்பி விட்டு உடனடியாக அமைச்சருடன் ஆலோனை நடத்தினார் மன்னர். அப்போது அரசவை மந்திரவாதி கூறியதையும் அமைச்சரிடம் கூற அங்கே உயிர் பலி திட்டம் உடனடியாக நிறைவேறியது. திறமை மிக்க படை தளபதி அரசு துரோகியாகி விட்டான். படை தளபதியை பலி கொடுக்கும் திட்டம் மன்னருக்கும்- அமைச்சருக்கும் மட்டுமே தெரியும்.
ஓரே கல்லில் இரு மாங்காய் அடிக்கலாம், மகளை மணமுடித்து கொடுத்த பகுதிக்கு தண்ணீரும் கொடுக்கலாம். தன் மகளை காதலித்தவனையும் சிரச் சேதம் செய்யலாம் என்று முடிவெடுத்தார்கள். உத்தரவை செயல்படுத்த தொடங்கினார் அமைச்சர்.
படை தளபதியை அவரசமாக அணை கட்டும் பகுதிக்கு அழைத்தார் அமைச்சர். அணைத்திரயனும் அங்கு கொண்டுவரப்பட்டான். மன்னர் கலாங்காதகண்டி ராஜாவும் அணைக்கட்டு பகுதிக்கு வந்தார். அங்கு படைத்தளபதி மீது ராஜ துரோக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டு அதற்கு தண்டனையாக உயிரோடு சமாதி வைக்க உத்தரவிடப்பட்டது. படைத்தளபதி அணைத்திரையன் மன்னரின் தண்டனையே ஏற்றான்.
என்னால் ஒரு நாடு வளம் பெருகும் என்றால் அதற்காக நான் என் உயிரை இழக்க தயார், அதே சமயம் உங்கள் மகளை காதலித்த குற்றத்திற்காக எனக்கு உயிரோடு சாமதியாகும் மரண தண்டனை கொடுத்தால் இன்னொரு உயிரையும் இழக்க நேரிடும் என்று மன்னரிடம் அணைத்திரயன் கூறினான்.
உடனே மன்னரோ நீ இன்னாட்டின் படைதளபதி மட்டுமல்ல, என்னுடைய மெய்காப்பாளும் நீ, என்பது எனக்கு தெரியும். என் நாட்டின் உயிர் நாடி நீ, ஆனால் நாட்டின் இளவரசியை பாதுகாக்க வேண்டிய நீயே அவளை காதலித்தது ராஜ துரோகம். அதற்காக இந்த தண்டணையை உடனே நிறைவேற்றுங்கள் என்று கூறவே.
அணைத்திரயனோ என்னை யாரும் நெருங்க கூடாது, அப்படி நெருங்கினால் உங்கள் உயிர் இங்கேயே போய் விடும், எனக்கு கொடுத்த தண்டனையை நானே நிறைவேற்றிக் கொள்கிறேன் என்று கூறி நம்பூதரி கூறிய அணைக்கட்ட போடப்பட்ட பெரும் குழியில் குதித்து அணைத்திரையன் தலைசாய்த்து படுத்தான். தன்னை மறந்து தியானத்தில் படுத்த அவன் சமாதி நிலைக்கு மாறினான். அவனை அப்படியே உயிரோடு வைத்து அந்த அணையை கட்டி முடித்தான்.
கட்ட, கட்ட உடைந்த அணையின் சுவர்கள் மீண்டும் புத்துயிர் பெற்றது. அணையும் கட்டி முடிக்கப்பட்டது. மன்னர் கலங்காதகண்டி ராஜா அணை கட்டிய இடத்தில் படைத்தளபதி அணைத்திரையனுக்கு சிலைவைக்க உத்தரவிட்டார். (அணைக்காக தலை சாய்த்ததால் அணைத்தலை வீரன் என்று பெயர்).
அடுத்த சில நாட்களில் இளவரசி அங்கே வந்தாள். மதிகெட்ட மந்திரியின் வஞ்சகத்தால் நாட்டை இழக்க போகிறாய். உன்னுடைய மந்திரிக்கு நவாப் ராஜா நண்பன். அவன் மூலம் உனக்கு ஆபத்து வரும்.
நம்மை இதுநாள் வரை காத்து வந்தவர்கள் இரண்டு பேர். ஓன்று படைத்தளபதி அணைதிரையன். மற்றொன்று அன்னை பகவதியம்மன், ஓன்றை நீ இழந்து விட்டாய். மந்திரியின் வஞ்சகத்தால் உள்ளதையும் இழந்து விடாதே. படைத்தளபதியை நான் கணவனாக ஏற்றுக் கொண்டு விட்டேன். அவர் இறந்த பின் என்னால் வாழ முடியாது என்ற அவள், தனது மூத்த சகோதரியின் வேண்டுகோளை ஏற்று தன் காதலனை உயிரோடு சமாதியாக்கி கட்டிய அணையில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.
இளைய மகளின் தற்கொலை பற்றி கவலைப்படாத மன்னன் அணையில் இருந்து கால்வாய் வெட்டி பராக்கிரம பாண்டியனாகிய தன் மருமகன் ஆட்சி செய்த தென்காசிக்கு விசுவநாதபுரம், அழக்கப்புரம், அய்யாபுரம் தென்காசியில் இன்றுள்ள தெப்பகுளத்திற்கு தண்ணீர் கொண்டு சென்றான். அந்த தெப்பக்குளத் தண்ணீர் சுந்தரபாண்டியபுரம் வரை செல்கிறது.
மரண தருவாயில் இளைய மகள் கூறியது போல் மந்திரியின் நண்பன் ஆற்காடு நவாப் கலங்காதகண்டிக்கு படையெடுத்து வந்தான். கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. குதிரையின் கால் குழப்புதான் தேய்ந்தது. ஓற்றனை அனுப்பி மந்திரியிடம் ஆலோசனை நடத்த உத்தரவிட்டான்.
ஓற்றனிடம் படைதளபதியை சமாதியாக்கியதையும், கோட்டை வாளகத்தில் உள்ள சக்தி வாய்ந்த பகவதி அம்மன் ஆலயம் உள்ள கதையையும், ஆலயத்தை அப்புறப்படுத்தினால் மட்டும் கோட்டைக்குள் நுழைய முடியும் என்றும் கூறி அதை ஆற்காடு நவாப்பிடம் கூறுமாறு சொல்லி அனுப்பிய அமைச்சர் உடனடியாக மன்னனை சந்தித்து பகவதியம்மன் கோவிலை கோட்டையில் இருந்து வெளியே கொண்டு போய் கோவில் கட்டுவோம், கோட்டைக்குள் கோவில் இருப்பதால்தான் குழப்பங்கலும், பிரச்சனைகளும் உருவாகிறது என்று சூழ்ச்சியோடு தகவல் சொன்னான்.
இவ்வாறு பேசி கலங்காதகண்டி மன்னரின் மனதை கரைய வைத்து கோட்டை கொத்தளத்துக்கு வெளியே உள்ள ஆலமரத்தடியை தேர்ந்தெடுத்து அங்கே சிறு ஆலயம் கட்டி உடனடியாக பகவதியம்மனை அங்கே கொண்டு போய் வைத்து பிரதிஷ்டை செய்தனர். கலங்காதகண்டிக்கு மன்னராகும் ஆசையில் ராஜதந்திரத்துடன் மந்திரி செயல்பட்டுள்ளார் என்பது மன்னனுக்கு காலம் கடந்து தெரிய வரவே கொதித்தெழுத்தவன் உடனடியாக அமைச்சரை கோட்டைக்குள்ளேயே ரகசிய சிறையில் யாருக்கும் தெரியாமல் சிறை வைத்து விடுகிறான்.
இதற்கிடையே ஆற்காடு நவாப் கலங்காதகண்டிக்கு படையெடுத்து கோட்டையை நெருங்கி வர கலங்காதகண்டி ராஜா தன் மனைவி மற்றும் படையோடு பாதாள சுரங்கம் வழியாக கேரளாவுக்கு தப்பி விடுகிறான். ஆற்காடு நவாப்பின் பீரங்கி தாக்குதலில் செம்மண்ணாலும், செங்கற்களாலும் கட்டப்பட்ட கோட்டை சின்னபிண்ணமாகி சிதைந்தது. சூழ்ச்சி செய்த மந்திரியும் பாதாள சிறையில் மண்ணோடு மண்ணாகியதாக வரலாறுகள் செவி வழி செய்தியாக உள்ளது.
இவ்வூருக்கு நுழைவில் இன்றும் ஆலமரத்தடியில் பகவதியம்மன் கோவில் உள்ளது. அரிகரநதியின் குறுக்கே சுமார் 100 அடி நீளம், 10 அடி உயரம் கொண்ட அணைக்கட்டும் உள்ளது. வடக்கு பகுதியில் அணைத்திரையன் சிலையும் உள்ளது.
கோட்டை முன் அமைக்கப்பட்ட ஆலடி ஊற்று, 3 கிணறு தூர்த்த நிலையில் உள்ளது.
பள்ளிவாசல் உள்ளது. பகவதியம்மன் ஆலயம் ஊரின் நுழைவுவாயிலில் உள்ளது.
சிதைந்த நிலையில் கோட்டையின் மதில் சுவர்கள் தனியார் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ளது.
ஐயப்பன் கோவில், அரிவாள்தட்டி ஓடையில் கருப்பசாமி சிலை.
சிவலிங்கம் இருந்ததற்கான நந்தி சிலை. இளவரசி தற்கொலை செய்த இடத்தில் தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறி வருகிறது. இந்த பகுதி நிலங்கள் அனைத்தும் தென்காசி காசிவிஸ்வநாதர், உலகம்மன் கோவிலுக்கு சொந்தமானது.
இயற்கையாகவே இந்த கிராமத்தின் கிழக்கு, வடக்கு திசையை சுற்றி சிறு, சிறு மலைக்குன்றுகளும், அதிலிருந்து சுமார் 30 அடி தாழ்வான பகுதியில் கோட்டை அமைந்திருத்ததும், தென்பகுதியில் 100 அடி அகலம் கொண்ட காற்றாற்று வெள்ளம் பாய்ந்து வரும் ஹரிகரா நதியும் அமைந்திருக்கின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக