ஈழத் தமிழர் துயர் துடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுதந்திர தின விழாவில் 
முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்


சென்னை: ஈழத் தமிழரின் துயர் துடைக்க இனியாவது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின சிறப்புரையாற்றிய தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய சுதந்திர தின உரை:
நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது. தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களை வணங்குகிறேன். இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதுதான் எனது இலட்சியம்.
கடந்த 15 மாத ஆட்சிக் காலத்தில் எனது தலைமையிலான அரசு பல சாதனைகளை புரிந்துள்ளது. 2010-11ம் ஆண்டில் 76 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இருந்தது. இது 2011-12 -ம் ஆண்டில் 106 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்திருக்கிறது.
காவிரியில் கர்நாடகம் உரிய நேரத்தில் நமக்குரிய பங்கை திறந்துவிடாததால் குறுவை சாகுபடியின் பரப்பு குறைந்துவிட்டது. இருப்பினும் தமிழக அரசின் 12 மணி நேர மும்முனை மின்சாரத்தால் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. சம்பா சாகுபடியைப் பொறுத்தவரையில் வழக்கமான பரப்பளவில் மேற்கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன.
அதிமுக ஆட்சிக்காலத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுளன. தமிழ்நாட்டில் மின்வெட்டு முழுவதும் நீங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடலூரில் தானே புயலால் பாதிக்கப்பட்டோருக்காக 1 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளன.
தமிழகத்தில் 33 லட்சம் பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 25 லட்சம் பேருக்கு விலையில்லா பொருட்கள் வழங்கபப்ட்டன.
அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த இருப்பிடங்களுக்கு செல்லவும் இலங்கையில் சிங்களவருக்கு இணையான உரிமைகளைப் பெறவும் இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். ஈழத் தமிழர் துயரை துடைக்க இனியாவது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ5 ஆயிரத்திலிருந்து ரூ7 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கான ஓய்வூதியம் ரூ3 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. தியாகிகளுக்கான மருத்துவபடி ரூ100லிருந்து ரூ500 ஆக அதிகரிக்கப்படும் என்றார் ஜெயலலிதா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்